சர்வதேச அளவில் 3-வது இடத்தில் உள்ள பிரேசில் சிறையில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை – 92 கைதிகளை விடுவித்து கும்பல்..!

சர்வதேச அளவில் 3-வது இடத்தில் உள்ள பிரேசில் சிறையில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை – 92 கைதிகளை விடுவித்து கும்பல்..!

பிரேசிலில் சிறை மீது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு பின்னர் சிறைக்குள் புகுந்த கும்பல் போலீஸ்காரரை சுட்டுக்கொன்று 92 கைதிகளை தப்பிக்க வைத்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் வடமேற்கு பகுதியில் ரொமேயூ கான்கேல்வ்ஸ் அப்ரான்டெஸ் நகரில் மிகப்பெரிய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல தரப்பட்ட குற்றங்கள் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இருந்தும் அவற்றை மீறி ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 92 கைதிகளை தப்பிக்க வைத்துள்ளனர்.

முன்னதாக 20 பேர் கொண்ட கும்பல் 4 வாகனங்களில் வந்து சிறை வாசலில் இறங்கினர். துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளை வைத்திருந்தனர். அதன் மூலம் சிறையின் முன்பக்க ‘கேட்’ உடைந்து நொறுங்கியது.

பின்னர் உள்ளே புகுந்த கும்பலுக்கும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காயம் அடைந்த போலீசாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார்.

இதற்கிடையே கும்பல் விடுவித்ததால் தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் 41 பேரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.சர்வதேச அளவில் சிறை கைதிகள் அதிகம் உள்ள நாடுகளில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு 7 லட்சத்து 26 ஆயிரத்து 712 கைதிகள் சிறை கைதிகளாக உள்ளனர்.