அமெரிக்காவில் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு சிறை

அமெரிக்காவில் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு சிறை

கால் சென்டர் நடத்தி, அமெரிக்கர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், ஆமதா பாத்தில், ‘கால் சென்டர்’ என்ற பெயரில் இயங்கி வந்த போலி நிறுவனங்கள், இங்கிருந்தபடி, இணையதளம் வழியாக, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை, இடைத்தரகர்களாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் தகவல்களை திருடி, அவர்களின் வரி ஏய்ப்பு விபரங்களை பெற்றுள்ளனர். பின், அவர்களை மிரட்டி, வருமான வரித்துறையினர் போல நாடகமாடி, போலியாக வங்கி கணக்குகளை உருவாக்கி பணத்தை வசூலித்துள்ளனர். குறிப்பாக வயதானவர்களை பயமுறுத்தி அவர்கள் வரி பாக்கியை தெரிவித்து கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அமெரிக்கர்கள் பலர் போலியாக உருவாக்கப்பட்ட சேவை நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளனர். அமெரிக்க புலனாய்வு மற்றும் வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 52க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நியூயார்க் கோர்ட்டில் நடந்த இந்த மோசடி வழக்கில், 21 இந்தியர்களுக்கு 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்தவுடன், குற்றவாளிகள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இது போன்ற செயல்களால் இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் உள்ள தொழில் வர்த்தக கூட்டமைப்பு கடும் நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.