இங்கிலாந்து எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!6 விக்கெட்டுகளுடன் குல்தீப் அபார சாதனை..!

இங்கிலாந்து எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி..!6 விக்கெட்டுகளுடன் குல்தீப் அபார சாதனை..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் டிரெண்ட் பிரிட்ஜில் உள்ள நாட்டிங்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக வியாழக்கிழமை (நேற்று) நடைபெற்றது .

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

துவக்க வீரர்கள் ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தலா 38 ரன்களுடன் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில், குல்தீப் யாதவ் வலையில் வீழ்ந்த இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. இதனால் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்பு வேகத்தில் தடை ஏற்பட்டது.

இதனிடையே பென் ஸ்டோக்ஸ் 103 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் 53 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.

INDvsENG

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. மேலும் ஒருநாள் போட்டிகளில் தற்போதுதான் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை முதன்முறையாக வீழ்த்தியுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஆடினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை தொடங்கினர்.அணியின் எண்ணிக்கை 59 ஆக இருந்தபோது ஷிகர் தவான் 40 ரன்களில் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.

ஒருபுறம் ரோகித் சர்மா சதமடிக்க, மறுபுறம் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். இருவரும் இணைந்து 167 ரன்கள் ஜோடி சேர்ந்தனர். விராட் கோலி 75 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்னுடனும், ராகுல் 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.