பாலியல் மன நோயாளிகளாக மாறியுள்ள ஆண்கள், சென்னையில் நடந்துள்ள கொடூரம்

சென்னை அயனாவரத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவியை, பதினெட்டு பேர் பாலியல் வல்லுறவுக் செய்த கொடூரம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.

சென்னை அயனாவரத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அப்பார்ட்மெண்ட்டில், டெல்லியைச் சார்ந்த ஒருவரின் குடும்பம் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் பதினோரு வயதான சிறுமி சென்னையின் பிரபல சிபிஎஸ்இ பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

வயதிற்குரிய மன வளர்ச்சி இல்லாத, கேட்கும் திறன் இல்லாத மாற்றுத் திறனாளியான அந்தச் சிறுமியை, அந்த அப்பார்ட்மெண்டில் பணிபுரிந்து வந்த பிளம்பர், லிப்ட் மேன், காவலாளி மற்றும் தண்ணீர் கேன் கொண்டுவருபவன் என பலரும் மிரட்டி பாலியல் கொடுமை செய்துள்ளனர்.

கடந்த ஏழு மாதமாக இக்கொடுமையை அனுபவித்து வந்த சிறுமியை ரவி என்ற லிப்ட் ஆப்ரேட்டர் தான் முதலில் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளான்.
அதன்பின் தனது நண்பர்கள் இருவரை அழைத்து வந்து சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளான்.

இதனை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத் தெரிந்துகொண்ட அந்த அப்பார்மெண்டின் வாட்ச்மென், பிளம்பர், எலெட்ரிசியன் என மேலும் சில ஊழியர்களும் அந்த சிறுமியை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். மயக்க ஊசியை செலுத்தி சிறுமியை கொடுமைபடுத்தியும் உள்ளனர்.

கிட்டத்தட்ட 20 வயதிலிருந்து 60 வயது வரை உள்ள ஆண்கள் இந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த நிலையில்,வெளியூரில் தங்கி கல்லூரியில் பயிலும் சிறுமியின் அக்கா விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தபோது, தனது தங்கை சோகமாகவும், சோர்வாகவும் ஏன் இருக்கிறாள் என விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை அக்காவிடம் சொல்லி கதறியிருக்கிறாள் பாதிக்கப்பட்ட சிறுமி.

சிறுமி சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மகிளா நீதிமன்ற நீதிபதியும் சிறுமியை அழைத்து விசாரணை செய்து, வாக்குமூலமும் பதிவு செய்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,

தன்னை பாலியல் வல்லுறவு செய்தவர்களை சிறுமி அடையாளம் காட்டியதில், பதினெட்டு பேரைக் கைது செய்துள்ளனர்.

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா என, ஒரு ஆய்வறிக்கை கூறியிருப்பதில் கிஞ்சிற்றும் பொய் இல்லை என்பதற்கு, சிறுமிக்கு நேர்ந்த கொடூரமே சாட்சி.

பாலியல் மன நோயாளிகளாக மாறியுள்ள ஆண்களை திருத்துவதற்கு அரபு நாடுகளிலுள்ள சட்டத்தை போல் கடுமையாகினால்தான் முடியும் என்னும் கருத்து மேலோங்கியுள்ளது.